Font Size

Layout

Menu Style

Cpanel

சிறுபான்மை மக்களின் உரிமை புறக்கணிப்பு இனத்துவேஷம் எதிர்கால்த்திற்கு பாதிப்பு - ஹிண்ட்ராப் எச்சரிக்கை

சிறுபான்மை மக்களின் உரிமை புறக்கணிப்பு இனத்துவேஷம் எதிர்கால்த்திற்கு பாதிப்பு - ஹிண்ட்ராப் எச்சரிக்கை

கோலாலம்பூர், ஏப்.3: மலாயர் அல்லாத சிறுபான்மை சமுதாய மக்கள் எதிர் கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளைக் கலைவதற்காக ‘சிறுபான்மையினர் நலத்துறை என்று தனியே அமைச்சகம் தேவையில்லை என்று புத்தம், கிறிஸ்துவம், இந்து சமயம், சீக்கிய சமயம், தாவோயிசம் ஆகிய சமயங்கள் அடங்கிய சர்வ சமய ஆலோசனை மன்ற பொதுச் செயலாளர் பிரேம திலகா சிறிசேன தெரிவித்திருப்பது, பெரும்பான்மை சமுதாயத்தின் கடைக்கண் பார்வைகாக சிறுபான்மை சமுதாயம் காலமெல்லாம் காத்துக் கிடப்பதற்கு ஒப்பானது என்று ஹிண்ட்ராஃப் இயக்கத் தலைவர் தலைவர் பொன். வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

1957-இல் மலாயா விடுதலை அடைந்து, தொடர்ந்து 1963-இல் இரண்டு போர்னியோ மண்டலங்களை இணைத்துக் கொண்டு மலேசியாவாக பரிமாணம் பெற்றது முதலே மலேசிய மக்கள் தொகையில் 45 விழுக்காட்டினராக உள்ள சிறுபான்மையினர் புறக்கணிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளனர். வெறுப்பு, அவநம்பிக்கை, தவறான எண்ணம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இனத்துவேஷம் நாளுக்கு நாள் வளரும்போக்கு, நாட்டின் எதிர்காலத்திற்கு ஊறு விளைவிக்கும். சிறுபான்மையினர் நலத்துறை ஏற்படுத்தப்பட்டால் அதற்கு யார் தலைமை ஏற்பது என்றும் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களே சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லல்லாம் என்றும் சர்வ சமய மன்றம் தெரிவித்திருப்பது, அதனுடைய பிற்போக்குத் தனத்தைக் காட்டுகிறது என்று ஹிண்ட்ராஃப் இயக்கம் சாடியுள்ளது.

இந்த நாட்டைப் போல, வேறு எந்த நாட்டிலும் இனப் பாகுபாட்டிற்கு அரசியல் சாசனமே துணைப் போவதில்லை. இனத்துவேஷம் அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி நாட்டின் இளைய சமுதாயத்தினர் மிகவும் கவலைப் படுகின்றனர். கிறிஸ்துவ போர்னியோ டாயாக் மக்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டிற்காக எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் குரல் எழுப்புவதில்லை. மாறாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தத்தம் சொந்த அரசியல் மீட்பிற்காகத்தான் பாடுபடுகின்றனர்.

கட்டாயத்தின் பேரில் இடம்பெயர்ந்த எட்டு இலட்சம் தோட்டத் தொழிலாளர்கள் ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலமாக இந்த நாட்டில் பாதிக்கப்படுவது குறித்து எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் குரல் எழுப்புவதில்லை. கட்டாய மதமாற்றமும் மதம் மாறிய முஸ்லிம் பெற்றோரால் பிள்ளைகள் கடத்தப்படுவதும் சமயத்தின் பெயரால் இறந்தவர்களின் உடல் அபகரிக்கப்படுவதும் திருமணம் நடைபெறும்போது திடீரென்று அதை சமயத்தின் பெயரால் தடைசெய்வதும் தொடர்ந்து நடைபெறுகின்றன.

சிறுபான்மை இனத்தினரை இழிவுபடுத்தும் விதமாக இண்டர்லோக் போன்ற நாவலை பாடத்திட்டத்தில் சேர்ப்பது, மாட்டுத் தலையுடன் ஊர்வலம் நடத்துவது, தீபகற்ப மலேசியாவாழ் பூர்வகுடி மக்களுக்கு போனால் போகிறது என்ற மனப்பான்மையில் சலுகை அளிப்பது போன்ற செயலெல்லாம் தொடரவேச் செய்கின்றன.

மலேசியாவில் சிறுபான்மை மக்களின் உரிமை நிலைநாட்டப்படுவதாக அரசாங்க ஆதரவு அமைப்பான சர்வ சமய ஆலோசனை மன்றத்தின் தலைவர்களும் மலாய் பெரும்பான்மை சமூகத் தலைவர்களும் பறைசாற்றிக் கொண்டாலும் உண்மை நிலை அவ்வாறில்லை. அதேவேளை, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் போன்ற வளர்ந்த நாடுகளில் சிறுபான்மை மக்களின் மேம்பாட்டிற்காக தனித் துறை இல்லை என்றாலும், அந்த நாடுகளில் சிறுபான்மை மக்களின் வளர்ச்சிக்காக உண்மையானஅக்கறையுடன் அந்தந்த நாடுகளின் அரசுகள் செயல்படுகின்றன.

நம் நாட்டிலோ, அன்றாட வாழ்வில் இனத்துவேஷம் ஊடுறுவி வருகிறது. இதற்கெல்லாம் பெரும்பான்மை சமூகத் தலைவர்கள் மறைமுக ஆதரவளிப்பது ஒருபுறமிருக்க, அரசாங்க நிதி மூலம் செயல்படும் சிறுபான்மை இயக்கங்களின் தலைவர்களும் ஆதரவு அளிப்பது வருத்தத்திற்குரியது.

மொத்தத்தில், மலேசிய அரசியலில், அரசியல் சாசன பாதுகாப்புடன் நிலவும் இனத்துவேஷத்திற்கு இரு துருவ அரசியல் பிரிவுகளுமே மறைமுக ஆதரவு தருகின்றன்வோ என்று ஹிண்ட்ராஃப் ஐயுறுகிறது என்று வேதமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


பொன்.வேதமூர்த்தி
தலைவர் - ஹிண்ட் ராஃப் இயக்கம்
02-04-2016.